கும்பகோணம்

kumbakonam க்கான பட முடிவு


கும்பகோணம்

 2500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்திலேயே இந்நகரம் இருந்ததாக நம்பப்படுகிறது. தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். அதன் பிறகுதான் இந்நகரம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எனினும் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்தான், கும்பகோணம் வளத்திலும், சிறப்பிலும் உச்சத்தை அடைந்தது. மதம் சார்ந்த கல்வி மற்றும் கலாச்சாரக் கல்வி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க  மையமாக இந்நகரம் திகழத்தொடங்கியதால், அப்போது இந்நகரம் "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.

தொடர்புடைய படம்

கோவில் நகரம் 

கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ சாரங்கபாணி கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் ஆகியவை இங்குள்ள கோவில்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற மகாமக திருவிழா இந்நகரத்தில்தான் கொண்டாடப்படுகிறது. மகாமகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகிறார்கள். கும்பகோணத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும், தமது ஆட்சிக்காலத்தில், இங்கு பல கோவில்களை கட்டுவதில் குறியாக இருந்துள்ளனர். எனினும் கும்பகோணத்தை தமது தலைநகரமாக கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த இடைக்காலச் சோழர்கள்தான் இங்கு கோவில்களை அமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவிலானது, இடைக்காலச் சோழர்களின் காலத்தில், கி.பி.7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவன் கோவிலான இதுதான் இங்குள்ள கோவில்களிலேயே மிகப் பழமையானது ஆகும். ஒவ்வொரு ஆட்சியாளரும் தாம் கட்டும் கோவில்கள் தமக்கு முன்னவர்களால் கட்டப்பட்ட கோவில்களை விடச் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று விரும்பி பெரிதும் முயன்றுள்ளனர்.உதாரணமாக நாயக்க மன்னர்கள் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயத்தை 12 தளங்களுடன் கட்டினார்கள். இந்நகரத்தை 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ரகுநாத நாயக்கர், ஸ்ரீ ராமசுவாமி ஆலயத்தின் சுவர்களில், இராமாயணத்தில் உள்ள காட்சிகளை ஓவியமாகத் தீட்டச் செய்துள்ளார். இப்பிரபஞ்சத்தையும், பூமியிலுள்ள உயிர்களையும் படைத்த பிரம்ம தேவனுக்கும் இங்கு கோவில் ஒன்று உள்ளது. உலகத்திலேயே பிரம்மனுக்கு ஒரு சில இடங்களில்தான் கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கும்பகோணத்தில் உள்ளது என்பது இந்நகரத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

யாத்திரீகர்களின் பூமி

இந்து ஆலயங்களை தவிர, ஏராளமான மடங்கள் இங்கு உள்ளன. இம்மடங்களனைத்தும் இந்து மடாலாயங்கள் ஆகும். ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தில் இருந்த புகழ்பெற்ற ஸ்ரீ சங்கரமடம், பிரதாப் சிங் என்னும் மன்னர் இந்நகரத்தை ஆண்டபொழுது கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1960களில் இம்மடம் திரும்பவும் காஞ்சிபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. கும்பகோணத்தில், தர்மபுரத்திற்கு அருகில் ஒன்றும் திருப்பனந்தாளுக்கு அருகில் ஒன்றும் ஆக இரண்டு வேளாளர் மடங்கள் அமைந்துள்ளன. கும்பகோணம் நகரத்தினுள் ராகவேந்திரமடம் உள்ளது. வைஷ்ணவ மடத்தின் கிளையான ஸ்ரீ அஹோபிலமடமும் இங்கு அமைந்திருக்கிறது. பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில்,உப்பிலியப்பன் கோவில், சோமேஸ்வரர் ஆலயம் மற்றும் கம்பகரேஸ்வரர் ஆலயம் ஆகியவை இங்குள்ள ஏராளமான கோவில்களில் சிலவாகும். இந்நகரத்திலும் நகரத்தைச் சுற்றிலும், ஏராளமான கோவில்களும் மடங்களும் அமைந்துள்ளதால், இந்து யாத்திரீகர்களுக்கு விருப்பமான இடமாக கும்பகோணம் அமைந்துள்ளதில் வியப்பேதுமில்லை.

காலநிலை 
குளிர்காலமே கும்பகோணத்திற்கு சுற்றுலா செல்வதற்கு உகந்த காலமாகும். சுற்றுலாப் பயணிகளும், யாத்திரீகர்களும் இக்காலத்தில் கும்பகோணம் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர் .

செல்லும் வழி 

கும்பகோணத்திற்கு சாலை வழியாகவும் இரயில் வழியாகவும் செல்வது எளிது. கோவில்களும், மடங்களும் நிறைந்த நகரத்தில் ஒளிந்துள்ள ஆச்சரியங்களை ஆராய சுற்றுலாப் பயணிகளை இந்நகரம் வரவேற்கிறது.
கும்பகோணம் நகராட்சி க்கான பட முடிவு

கும்பகோணம் நகராட்சி
கும்பகோணம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் இந்நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 45 உறுப்பினர்களை கொண்ட நகராட்சி ஆகும்.


மக்கள்தொகை பரவல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 154,237ஆகும். அதில்ஆண்கள் 78,147,பெண்கள்76090 உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.


குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்
சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம். இந்தச் செல்வத்தைச் சோழர் பாதுகாப்பது போலத் தாய் தன் மகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது ஒரு பாடல். கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே – குடவாயிற் கீரத்தனார் – அகநானூறு 60.


நகரின் ஆன்மீகப் பெருமை
கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.

இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன.

யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக தாராசுரம் கோவிலை அறிவித்திருக்கிறது.


தல வரலாறு

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்" கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".

சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்தஅமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது.
திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.
சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.


பெயர்க் காரணம்

பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுதகுடத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவிய தலம் குடமூக்கு என்னும் பெயர் தாங்கியுள்ளது என்னும் விளக்கம் குடமூக்கு என்னும் சொற்றொடருக்குத் தரப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு நாயனாரும் இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.


கும்பகோணம் தல புராணங்கள்

கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு தலபுராணங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை :
 1) கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
2) கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு).
3) கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு).
4) திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது.
1865ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல சைவப் பெருமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருக்குடந்தைப் புராணத்தை இயற்றியளித்துள்ளார். 1866ஆம் ஆண்டு தை மாதம் அச்சிடப்பெற்ற இத் திருக்குடந்தைப் புராணம் இலக்கியச் சிறப்புகள் பல கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம்.

கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.

குடந்தை
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில், 50 இடங்களில் குடந்தை என்ற பெயர் ஆளப்பெற்றுள்ளது.  பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் பாடலில் குடந்தை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி


குடமூக்கு
நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 51 பாசுரங்களில், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 97ஆம் வெண்பா ஒன்றில் மட்டும் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தேவாரத்தில் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குடமூக்கிலே


கும்பகோணம்
கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது.

பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் குடமூக்கு என்றும் குடந்தை என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார், உலகத்தின் பல்வேறு பகுதியிருந்து மண் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின, இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மண் எடுத்து குடம் செய்து வேதங்களைக் காத்தார்.
குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.


பஞ்சகுரோசத்தலங்கள்

சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. இத்தலங்களைப் போற்றும் பாடல் திருக்குடந்தைப் புராணத்தில் காணலாம்.

“கற்றவர் புகழும் கும்பகோணத்தைக் கலந்து போற்றும்
பெற்றியரைங் குரோச யாத்திரை பேணல் வேண்டும்
உற்றவத் தலமோரைந்துள் ஒவ்வொன்று றொரு நான்மேவிற்
பெற்ற புண்ணியம் பயக்கும் என்மனார் புலமைசான்றோர்“









Comments