தரிசனம்
திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்குமேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கும். இவர்களுக்கு, உணவு, குடிநீர் , போக்குவரத்து, தங்கும் அறைகள், லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
மிகத் திட்டமிட்ட ஏற்பாடுகள், நுட்பமான நிர்வாக முறை என தினந்தோறும் பிரமாண்டமாகக் கூடும் பக்தர்களுக்கு எவ்வித குழப்பங்களும் ஏற்படாமல் நேர்த்தியாக வசதிகளைச் செய்திருக்கிறார்கள் திருமலையில்.
கூட்டத்தைச் சமாளிக்க மூன்றுவிதமான தரிசனமுறைகளை வைத்துள்ளனர். 'சர்வ தரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம். எல்லாமே பயோமெட்ரிக் முறையிலானவை. மிகவும் வெளிப்படையானவை.
உதாரணமாக, ஒருவர் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய திடீரென திட்டமிட்டால், 'சிறப்பு தரிசனம்' செய்ய இணையதளத்தில் புக் செய்யலாம். 300 ரூபாய் டிக்கெட்.
தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.
திருப்பதிக்குச் செல்ல ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு, 120 நாள்களுக்கு முன்பாக, ஆன்லைனிலேயே பதிவு செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவைதவிர தேவஸ்தான அலுவலகங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.tirumala.org இணையதளத்தின் வழியாக அறியலாம்.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒரு நாளில் காலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையில் தொடங்கி, தோமாலை சேவை, கொலுவு (தர்பார்), சஹஸ்ரநாமார்ச்சனை, நித்திய கல்யாணோத்ஸவம், டோலோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸம், ஆர்ஜித வசந்தோத்ஸவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை, இரவு 11.00 மணிக்கு ஏகாந்த சேவை வரை நடைபெறுகின்றன. இவை அனைத்துக்கும் கட்டணம் உண்டு.
இந்தச் சேவைகளில் பங்கேற்கவும் ஆன்லைனில் புக் செய்யலாம். ஒருமுறை இந்த சேவைகளுக்கு புக் செய்தால், மறுபடியும் அவருக்கு 6 மாதங்கள் கழித்துதான் வாய்ப்பு வழங்கப்படும். இப்படி எல்லாவற்றிலுமே தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துகிறது திருமலை நிர்வாகம்.
'Govinda tirumala tirupati devasthanams' என்னும் மொஃபைல் ஆப் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கி உள்ளது. இதன் உதவியுடன் சிறப்பு தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்யலாம். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடையையும் இந்த ஆப் மூலம் வழங்க முடியும். கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த ஆப்பை டவுன்லோடு செய்யலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் தகவல் தொடர்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஆர்ஜித சேவைக் கட்டணம், தங்கும் வசதி, நன்கொடை திட்டங்கள், முன்பதிவு விவரம் ஆகியவற்றை இந்த மையத்தைத் தொடர்புகொண்டு அறியலாம். இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0877- 2233333, 0877-2277777
Comments
Post a Comment