கோவைக்குற்றாலம்

 குளுகுளு அனுபவத்தை பெற விரும்புபவர்கள் கோவைக்குற்றாலம் போய் வரலாம்.

அருவிக் குளியல், இதமான சூழல் இவற்றைத் தாண்டி தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மர வீடுகள், மிதக்கும் பாலம் என்று புதுமையான அனுபவத்தைப் பெற கோவைக் குற்றாலத்தை விட்டால் நம் பட்ஜெட்டிற்கு வேறு இடம் கிடைக்காது.
கோவை காந்திபுரத்திலிருந்து சிறுவாணி சாடிவயல் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தால் ஒரு மணி நேரப் பயணத்தில் கோவைக் குற்றாலத்தை அடைந்துவிடலாம். முதலில் நம்மை வரவேற்கிறது தரைப்பாலம். அதில் சலசலத்து ஒடும் சிறுவாணித்தண்ணீர். உலகத்திலேயே ருசியான தண்ணீருக்கு இரண்டாவது இடம் சிறுவாணித் தண்ணீர்தானாம்.

கோவைக்குற்றாலத்திற்குள் புகை, மது, போதை வஸ்துக்களுக்கு தடா, சூழல் சுற்றுலாப் பகுதி என்பதால் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் நோ என்ட்ரீ!
நுழைவாயிலுக்கு அருகிலேயே சிறுத்தையிலிருந்து பல கொடூர மிருகங்களை சாதுவாக பாடம் செய்து வைத்துள்ளார்கள். அவற்றை ரசித்துவிட்டு வெளியே வந்தால் கொஞ்ச தூரத்திலேயே மர வீடுகள்.
சுற்றிச் சுற்றி ஏறும் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் உள்ளே ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான அறைகள். குளிர்சாதன படுக்கையறை, வரவேற்பறை, குளியறை என மூன்று பெரிய அறைகளைக் கொண்ட மர வீடுகளில் இரவு தங்கி வனவிலங்குகள் நடமாட்டத்தை மேலே இருந்து ரசிக்கலாம்!
காலுக்குக் கீழே சில அடி தூரத்தில் யானையும் நரியும் நடமாடினால்... அதிலும் இருட்டுவேளையில் நினைத்துப் பாருங்கள். படு திரில்லிங்கான அனுபவம். பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாள் மதியம் 12 மணி வரை மர வீடுகளில் தங்கி இளைப்பாறுவதற்கு ஒரு வீட்டிற்கு 2000 ரூபாய் கட்டணம்.
கும்மிருட்டையும் தாண்டி நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தைப் பார்க்கலாம். நடுநிசியில் காதைப் பிளக்கும் யானைகளின் பிளிறல் சில சமயங்களில் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பான அறை என்பதால் உள்ளே வந்து அமர்ந்துகொள்ளலாம்.
கண்ணிற்கு இதமான காட்சிகள், காதிற்கு இதமளிக்கும் குயில்களின் சங்கீத ஒலி, இவற்றோடு ஓரிரவு முழுக்க சங்கமமாகி விடலாம் தானே! பட்டாம் பூச்சிகளின் இரைச்சல் கூட தெளிவாகக் கேட்கும் நிசப்தம். இப்படி இரவைக் கழிக்க இதைப் போன்று வித்தியாசமான இடம் உண்டா?
த்ரில்லிங்கான இரவுப்பொழுதைக் கழித்த பின் குளியல் போட்டுவிட்டு அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்று விளையாட்டென குழந்தைகளோடு குழந்தைகளாய் மாறி விளையாடி விட்டு நடைபோட்டால், காட்டிற்குள் மரங்களுக்கு மேல் கட்டப்பட்டுள்ள மிதக்கும் பாலம். அந்தரத்தில் இருக்கும் தொங்கு பாலத்தில் ஆடியபடியே குடும்பத்தோடு நடப்பது கூட வித்தியாசமான அனுபவம்தான்!
தொங்கு பாலத்தை விட்டு கீழறங்கி நடந்தால் வழியில் மலையில் விளையும் மாங்காய்கள், பழங்கள், வெள்ளரிக்காய்களை ஆதிவாசிகள் விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கி கொறித்தபடியே மீண்டும் நடைபோட்டால் அருகில் அருவி விழும் சப்தம் உரக்கக் கேட்கின்றது.
மலையின் மேலிருந்து விழும் சிறுவாணித் தண்ணீர் கற்கண்டாய் இனிக்கும். நீரைக் குடித்துக்கொண்டே குளியல் போடலாம்.
காதலர்கள் இல்லாத சுற்றுலாத்தலமா? ஏராளமான காதல் ஜோடிகள் ஆங்காங்கே மறைவில் அமர்ந்து பங்குச்சந்தை நிலவரங்களை கவலையோடு சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்!
மெல்ல குளியல் போட்டு விட்டு சூரிய வெளிச்சத்தில் இளைப்பாற பெரிய பாறைகள் உள்ளன. இளைப்பாறி முடிந்ததும் கையோடு கொண்டு வந்திருந்த உணவை உண்ணலாம். பக்கத்தில் அருவி, சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள் இவற்றின் நடுவே உணவு உண்ணும் அனுபவம் இனியொரு முறை கிடைக்குமா என்று ஏங்க வைக்கும்!
கோவைக் குற்றாலத்திற்கு திங்கள்கிழமைகளில் விடுமுறை. வாரம் முழுவதும் சேரும் குப்பைகளைச் சுத்தப்படுத்துவதற்கு திங்கள்கிழமை விடுமுறை பயன்படுகிறதாம். மொத்தத்தில் சுற்றிலும் காடு, வன விலங்குகள் நடமாட்டம், அருவிக் குளியல், அந்தரத்தில் தூங்க வீடுகள், தொங்குபாலம் என ஓரிரவு முழுவதும் படு த்ரில்லிங்கான அனுபவம் நமக்கு நீண்ட நாட்களுக்கு மனதில் இருக்கும்.

Comments