எப்படி வணங்குவது
திருமலைக்கு போகும் போது ஆகாரத்தில் (உணவில்) கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. வெங்காயம் பூண்டு சாப்பிடுபவர்கள் கூட அன்று ஒரு நாள் விட்டுத் தரலாம்.
உடை விஷயத்தில் கலாச்சாரத்தை அனுசரித்து உடை அணிவது சிறந்தது. ஆணாக இருந்தால் வேட்டி என்பதும் பெண்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய உடை என்பது இன்று கட்டாயம் ஆக்கிவிட்டார்கள்.
அனாவசிய பேச்சை குறைத்து இறைவன் நாமத்தை ஜபித்தபடி செல்லலாம்.
திருமலையில் தரிசனம் செய்யும்முறை:
மலை மேல் சென்றதும் முடிந்தால் கோவிலுக்குள் செல்லும் முன் ஸ்வாமி புஷ்கரிணி எனப்படும் குளத்தில் நீராடுதல் நல்லது.
நீராடிய பின் நெற்றியில் அவரவர்கள் குலாச்சாரப் படி குறியீடு செய்து கொள்ளுதல் முக்கியம்.
அடுத்து குளத்தின் கரையில் இருக்கும் ஆதி வராஹப் பெருமாள் சன்னதியில் (இது தனிக்கோவிலாக இருக்கும்) சென்று சேவிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த சன்னதி மூடி இருக்கும் என்பதால் உள்ளே உள்ள வராஹரை சேவிக்கலாம். முதலில் இவரை சென்று வணங்குவதன் காரணம், திருமலை வராஹரது பூமி, அதில் பெருமாள் குடியிருப்பதால் எந்த ஒரு முதலில் வராஹருக்குத்தான் என்பது தேவஸ்தானத்தில் கடைப்பிடிக்கும் வழக்கம். இங்கே போக நேரம் இல்லை என்றால் உள்ளே ஸ்தம்பத்தில் (தூணில்) உள்ள ஆதிவராஹரை சேவித்துக்கொள்ளலாம்.
வராகர் சன்னதி முடிந்ததும் கோவிலுக்குள் செல்வது... இன்றைய கால கட்டத்தில் நேரே அது முடியாது, க்யூவில் நின்றாலும் கோவிலின் நுழைவாயில் வந்ததும் முதலில் காணப்படும் த்வஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) முன்பே கீழே விழுந்து சேவிக்கலாம். ஆண்கள் மட்டும் நெடுஞ்சாண்கிடையாகவும் பெண்கள் மண்டியிட்டும் சேவிக்கணும். இங்கே உள்ள பலி பீடத்தையோ கொடிக்கம்பையோ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இது எல்லாக் கோவில்களுக்கும் பொது. த்வஜஸ்தம்பத்தைத் தாண்டியபின் கீழே விழுந்து சேவிக்கலாகாது...இதுவும் எல்லா கோவிலுக்கும் பொருந்தும்.
க்யூவில் நிற்பதால் ஒரு வேளை இது முடியாது போனால் இருந்த இடத்திலிருந்து கையால் கும்பிடலாம்.
க்யூ வளைந்து இடதுபக்கம் செல்லும். அங்கே வரதர் சன்னதி இருக்கும், க்யூவில் இருந்தாலும் இவரை சேவித்துச் செல்லலாம்.
அங்கிருந்து பெருமாளின் கர்பக்ருஹத்தின் முன் மண்டபம் வழியாக செல்வோம். உள்ளே உள்ள ஒரு ஸ்தம்பத்தில் வராகர் கோவிலில் உள்ளது போலவே ரூபத்துடன் வெளியில் சேவிக்கத் தவறின ஆதி வராகர் இருப்பார். அவரையும் சேவித்துவிட்டு பெருமாளின் முன் எப்போதும் நிற்கும் கருடாழ்வாரையும் வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்ல வேண்டும். சில சமயம் அதிக கூட்டம் என்றால் வெளியில் இருந்தே திருப்பி விடுவார்கள், எப்படியும் த்வாரபாலகர் வரை போகலாம்.
சன்னதிக்குள் நுழையும் முன் வாசலில் இருக்கும் த்வார பாலகர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கி உள்ளே நுழைய அனுமதி கோரவேண்டும். இதை மனதால் செய்தால் போதும், பிறகு பெருமாளின் திவ்ய தரிசனம்.
முடித்ததும் வெளியில் வந்தால் இடது கோடியில் பழைய மடப்பள்ளி (கோவிலின் kitchen) இருக்கும், அங்கே உள்ளே மேற்பார்வை பார்த்துக்கொண்டு வகுளாதேவி (ஸ்ரீனிவாசப் பெருமாளின் தாயார்...யசோதையாக பிறந்தவரும் இவரே...) இருப்பார். அவரை கண்டிப்பா சேவிக்கணும்.
முடித்ததும் தீர்த்தம் சடாரி சாதிப்பார்கள். அது முடிந்து பிராகாரத்தை வலம்வந்தால் ஒரு இடத்தில் எல்லாரும் படியில் ஏறி ஏறி பார்ப்பார்கள், நீங்களும் பாருங்கள், விமானத்தின் மேலே (தங்க விமானத்தில் வெள்ளியால் ஒரு பிரபை இருக்கும்) விமான வெங்கடேசர், அவரையும் வணங்கிவிட்டு வந்தால் உண்டியில் காணிக்கையை செலுத்திவிட்டு எதிரில் உள்ள ராமானுஜர் சன்னதி, அருகிலேயே யோகநரசிம்மர் சன்னதியையும் விடாமல் சேவித்துவிட்டு வெளியில் வரலாம்.
சுருக்கமா சொல்லவேண்டும் என்றால் கோவிலுக்குள் சென்றுவிட்டால், நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம், கூட்டமே நம்மை வழிநடத்திச் சென்றுவிடும்.
வெங்கடேஸ்வரனை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்து தெரிவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருச்சானூரில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரின் சிபாரிசை அந்த பெருமாளும் ஏற்றுக்கொண்டு, தன்னை மலை போல நம்பி மலை மீது ஏறி வரும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அவர் போக்கி அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்
பிரம்மோற்சவம்
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
திருப்பதி லட்டு
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
Comments
Post a Comment